டில்லி:

டிகர் ரஜினிகாந்த் நடித்து தோல்வியை தழுவிய கோச்சைடையான் படத்திற்காக வாங்கப்பட்ட கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று உச்சநீதி மன்றம் படத்தயாரிப்பாளரான ரஜினியின் மனைவிக்கு கேள்வி விடுத்துள்ளது.

லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக படத்தயாரிப்பாளரான லதா ரஜினி காந்த் பெருத்த நஷ்டத்தை சந்தித்தார்.

இந்த படம் தயாரிக்க ஆட்பீரோ என்ற  நிறுவனத்திடம், நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான  லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடன் அடைக்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஆட்பீரோ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது, பணத்தை ஏன் செலுத்தவில்லை என்றும்,  எப்போது செலுத்துவீர்கள் என்று லதா ரஜினிகாந்துக்கு  கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து பகல் 12.30 மணிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் 12.30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, 6.2 கோடி ரூபாயை 3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

ரஜினிகாந்த் அரசியல் வருவதாக அறிவித்து, அதற்கான பணிகளை மேற்கொள்ளு வரும் நிலையில், அவரது மனைவியான லதா ரஜினிகாந்த் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே ஆஸ்ரம் பள்ளி கட்டிட வாடகை  விவகாரம் மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஊதிய பிரச்சினை காரணமாக சர்ச்சையை ஏற்படுத்திய லதா ரஜினிகாந்த், சமீபத்தில்  அரசுக்கு சொந்தமான இடத்தில் நிறுவனம் நடத்தியதில்,  வாடகை செலுத்தாமல் பிரச்சினை ஏற்படுத்தி, நீதிமன்றம் அவருக்கு குட்டு வைத்த  நிலையில், தற்போது கோச்சடையான் பட விவகாரத்திலும் உச்சநீதி மன்றம் அவருக்கு மீண்டும் குட்டு வைத்துள்ளது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை அதனால் ஆன்மிக அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினிகாந்த், முதலில் தனது மனைவியின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்திவிட்டு அரசியலுக்கு வர  வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.