8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழைப் பிழையின்றி எழுதுவோம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பழனிவேல் தியாகராஜன் இதனை தெரிவித்தார்.
தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கிய 7 கணித்தமிழ் மென் பொருள்கள் மற்றும் தமிழைப் பிழையின்றி எழுதுவோம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் :
தமிழ் இனத்தையும், கலாசாரத்தையும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் தமிழ் மொழியை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தமிழ் மொழியை மாற்றி, அதை அனைவரிடமும் கொண்டு செல்லும் பணியில், தமிழ் இணையக் கல்விக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 38 நாடுகளில் 175 மையங்கள் அமைத்து, அதன்மூலம் இணையவழியில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதன்மூலம் 71,250 மாணவா்கள் இதுவரை பயனடைந்துள்ளனா்.
சென்னையில் உள்ள 50 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்கள், பருவ இதழ்கள், 8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தனிதமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.