டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 79வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (12ந்தேதி) ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் எல்லையில், அயானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்று 79வது நாளாக தொடர்கிறது. கடந்த ஜனவரி 26ந்தேதி டிராக்டர் பேரணி நடத்தினர். அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், வரும் 18ந்தேதி நாடு முழுவதும் ‘ரெயில் ரோகா’ என்ற பெயரில் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சம்யுக்தா கிஸான் மோர்ச்சா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளால் நடத்தப்படும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக வருகின்ற 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், ராஜஸ்தானில் வருகின்ற 12 ஆம் தேதி முதல் அதாவது நாளை சுங்கச்சாவடிகளை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.