சென்னை:  ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் 2 நாட்களில் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கியுள்ள ஒரு சீட் ப.சிதம்பரத்துக்கு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சியின் இந்த நடவடிக்கை சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகங்கை தொகுதி எம்.பி.யாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ள நிலையில், தற்போது ப.சிதம்பரத்துக்கும் எம்.பி. பதவி கொடுக்க முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4 இடங்களில் திமுக கூட்டணிக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு கிடைக்க உள்ள 4 இடங்களில் திமுக 3 இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.  அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் எம்.பி. பதவியை கைப்பற்ற கடுமையான போட்டி எழுந்துளளது.

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு செய்யப்படு வார் என்றும் கூறியதுடன்,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து சிபிஐ ரெய்டு குறித்து விமர்சித்தவர்,.  ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்படுவது மிகவும் கீழ்த்தரமான செயல். சிபிஐ சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள். இது நேர்மையற்ற செயல். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை, சோதனையில் கிடைத்து என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  சிந்தன் ஷிவிர் கூட்டத்தில் ஒருவருக்கு ஒரு பதவி; குடும்பத்தில் ஒருவருக்கே சீட் கொடுப்பது என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், தற்போது கட்சியின் அறிவிப்புக்கு நேர்மாறாக ப.சிதம்பரத்துக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட இருப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மகன் சிவகங்கை தொகுதி எம்.பி.யாக உள்ள நிலையில், அவரது தந்தையான ப.சிதம்பரத்துக்கு எம்.பி. பதவி கொடுக்க கட்சி முன்வந்துள்ளது, காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.