வேலூர்
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டால் 77% வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என வேலூர் சிஎம்சி ஆய்வு தெரிவிக்கிறது.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 21 முதல் ஏப்ரல் 30 வரை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் முதல் கட்ட தடுப்பூசி பணிகள் நடந்தன. இதில் 8991 சுகாதாரப் பணியாளர்கள் ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் 8400 பேர் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.
இவர்கள் கடந்த பிப்ரவரி 21 முதல் மே 19 வரை ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களிடம் நோய்த் தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது குறித்த ஆய்வு நடந்தது. இவர்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. மேலும் 2 டோஸ் ஊசி போட்ட இவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 65% மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிராக 77% ஆக்சிஜன் தேவைக்கு எதிராக 92% மற்றும் ஐசியு அனுமதியிலிருந்து 94% பாதுகாப்பு கிடைத்துள்ளது.
இதைப் போல் ஒரே டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 61% மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிராக 70% ஆக்சிஜன் தேவைக்கு எதிராக 94% மற்றும் ஐசியு அனுமதியிலிருந்து 95% பாதுகாப்பு கிடைத்துள்ளது.
இதில் அதிகம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காததால் அவர்களை ஆய்வில் ஈடுபடுத்த முடியாமல் இருந்துள்ளது. மேலும் ஒரே டோஸ் போட்டுக் கொண்டவர்களில் பலருக்கு தடுப்பூசி பற்றாக்குறையால் இரண்டாம் ஊசி தாமதமாகப் போடப்பட்டுள்ளது.
இதை போல் எந்தவொரு தடுப்பூசியும் பெறாத 1,609 சுகாதாரப் பணியாளர்களில், 438 (27.2%) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,64 (4%) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். எந்தவொரு தடுப்பூசியையும் பெறாத பதினோரு (0.7%) நபர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டது, எட்டு (0.5%) பேருக்கு ஐ.சி.யூ பராமரிப்பு தேவைப்பட்டது.