டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாட மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.  சுதந்திரதினத்தை ஒட்டி, ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்திற்காக, மீரட்டில் உள்ள சிறை கைதிகள், தேசிய கொடிகளை தைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் சுதந்திர தின விழாவில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்க, கடந்த ஜூலை 22ம் தேதி, பிரதமர் மோடியால் ‘ஹர் கர் திரங்கா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. மேலும்,  ஆகஸ்டு 13முதல் 15ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு பொதுமக்கள்  அனைவரும், தங்களது வீடுகளில்,  தேசிய கொடியை பறக்க விட வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.  சாமானியக் குடிமகனும் தேசியக் கொடியை, தங்களது வீட்டு மாடிகளில் மூன்று நாட்களுக்கு பறக்க விடலாம் என்றும், இரவு பகல் என 24 மணி நேரத்திற்கு பறக்க விடலாம் என்ற வகையில், 2002ம் ஆண்டின் இந்திய தேசியக்கொடிக் குறித்த சட்டம் திருத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேசிய கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது. மீரட்டில் உள்ள சிறை கைதிகள், தேசிய கொடிகளைத் தைத்து வருகின்றனர். இதுகுறித்து  கூறிய சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் , “30 ஆண் கைதிகளும், 10 பெண் கைதிகளும் தொடர்ந்து திரங்கா (தேசிய கொடி) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 39 முகாம்கள் உள்ளன. ஒவ்வொரு படைமுகாமிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். ஹர் கர் திரங்கா பிரச்சாரம் மீரட் மாவட்டச் சிறையில் கண்டிப்பாக பின்பற்றப்படும்.” எனக் கூறினார்.