சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நேற்று நடைபெற்ற  முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

முதற்கட்டமாக நேற்று (அக்டோபர் 6ந்தேதி) 39 ஊராட்சி ஒன்றியங்களில் ,  78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,577 கிராம ஊராட்சித்தலைவர்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் மொத்த வாக்குப்பதிவு 74.37%  என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும்,  காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளாவூர் ஊராட்சியில் வேட்பாளர் பெயரில் குளறுபடி ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

அதிகபட்ச வாக்குப்பதிவு  விழுப்புரத்தில் 81.36% ஆக உள்ளது. அதையடுத்து  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81%, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் , திருப்பத்தூரில் 78 %, தென்காசியில் 74%, கள்ளக்குறிச்சியில் 72%, நெல்லையில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.