டெல்லி: 7306 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் நிலை குறித்து, எம்.பி அப்துல் வகாத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய  உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியதாவது,

அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்திய குடியுரிமை கேட்டு  இதுவரை 10,635 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து டிசம்பர் 14ந்தேதி வரையிலான நிலவரப்படி, 7,306 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 1,152 விண்ணப்பங்களும், அமெரிக்காவில் இருந்து 223 விண்ணப்பங்களும், இலங்கையில் இருந்து 223 விண்ணப்பங்களும், நேபாளத்தில் இருந்து 189 விண்ணப்பங்களும், வங்கதேசத்தில் இருந்து 161 விண்ணப்பங்களும், சீனாவில் இருந்து 10 விண்ணப்பங்களும் வந்துள்ளன. மேலும் நாடற்றவர்கள் என்று 428 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.

குடியுரிமை தொடர்பான விண்ணப்பங்களை சரிபார்த்து, பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கு  குடியுரிமை வழங்குவது குறித்து,   இந்திய உள்துறை அமைச்சகம்  முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.