ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.
கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள் 22 பேர் படுகாயமடைந்தார்கள்.
ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த இடத்தை சீரமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறாததை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

யாத்திரை தொடங்குமிடமான கத்தாராவில் மட்டும் சுமார் 7000 யாத்ரீகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் பலர் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே டிக்கெட் வாங்கியுள்ளனர், இதனால் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்ப மனமில்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.
பயங்கரவாத தாக்குதல் மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு காத்திருக்கும் வெளியூர் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
இங்குள்ள விடுதிகள் சங்கம் சார்பில் இவை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர்வாசிகளும் தங்கள் பங்கிற்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இருந்தபோதும் யாத்திரை செல்லும் பாதை இன்னும் சீராகததை அடுத்து மேலும் எத்தனை நாள் இப்படி காத்திருக்க நேரிடும் என்பது உறுதியாக தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.