தேனி; தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதிக்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழைமை தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து லட்சக்கணக் கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  தேனியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தொடங்கி வைத்த அமைச்சர் மாசு,  தொடர்ந்து குமுளியிலும், தேவதானப்பட்டியிலும் நடந்த முகாம்களை அவர் ஆய்வு செய்தார்.  இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய அலுவலகம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஒரு கோடியே 42 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிர்ணயித்த 1.04 கோடியை விட 38 லட்சம் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 1.23 கோடி தடுப்பூசி போட  இலக்கு நிர்ணயித்துள்ளது. நாம் அதையும் அடைந்துவிடுவோம்.

தமிழகத்தில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால், எந்த அலை வந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.