சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு  தொடங்கியபோது, சென்னையின் இதய பகுதியான அண்ணாசாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் மே மாதம் முதல் அண்ணா சாலை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியது. அதற்கான பணிகள் தொடங்கியதும், சென்னை அண்ணா சாலையில் பல பகுதியில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

சென்டரல்- மவுன்ட் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் செல்லும் வழி மற்றும்  ரயில் நிலையம் அமைப்பதற்காக, அண்ணாசாலையில் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., மற்றும் ஆயிரம் விளக்கு பகுதிகளில் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாகனங்கள்  ஜி.பி., சாலை, ஒயிட்ஸ் சாலை உள்பட பல இடங்கள் வழியாக திருப்பி விடப்பட்ன. ஜி.பி.,ரோடு, உட்ஸ்ரோடு, ஒயிட்ஸ் ரோடு மற்றும் திரு.வி.க., ரோடு ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

சென்னையின் இதயப்பகுதியான அண்ணா சாலையில் ஒருநாளைக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வந்துபோகும் நிலையில், இந்த ஒரு வழி மாற்றம் கடுமையான போக்கு வரத்து நெரிசல் மட்டுமின்றி கால தாமதத்தை ஏற்படுத்தி வந்தது.

தினசரி காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகம் செல்பவர்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகி வந்தனர். தற்போது இதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சாலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து வரும் மே மாதம் முதல் அண்ணா சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக வாகன நெரிசலில் சிக்கி வந்த சென்னை வாகன ஓட்டிகளுக்கு  விரைவில் விடிவுகாலம் பிறக்க உள்ளது.