சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், விதிகளை மீறுவதிலேயே ஆளுநர் குறியாக செயல்படுகிறார் என ஆளுநர் உரை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் வழக்கமான கேள்வி பதில் முடிவடைந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “அரசின் திட்டங்களால் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார். புதுமைப்பெண்கள் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதால் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தால் பலன் அடைந்து வரும் மாணவிகள் ‘அப்பா’ என்று என்னை அழைப்பதை கேட்டு மகிழ்ந்து போகிறேன்” என்றார். இவ்வாறு பேசும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.
பின்னர் தொடர்ந்து அவர் பேசினார். அப்போது, திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் ஆளுநர் ரவி குறியாக உள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன், 2022-ல், இப்போது இருக்கும் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசித்தார், எதையும் மாற்றவில்லை. ஆனால் இந்த 3 ஆண்டு காலமாக அபத்தமான காரணங்களை கூறி உரை படிப்பதை தவிர்த்தார் என அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாடு வளர்ந்துவருவதை அவரால் ஜீரனிக்க முடியவில்லை என நினைக்கிறேன். சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததின் மூலமாக அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை ஆளுநர் செய்துவருவது, இந்த பேரவை இதுவரை காணாத ஒன்று.. இனியும் காணக் கூடாது என்றார்.
தொடர்ந்து பேசியவர், விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். விடியல் தரப்போகிறோம் என சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல; விடியலை பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.
ரவுடிகளின் மீது தயவு தாச்சனம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவில் பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினை காதல் விவகாரம் பணம் கொடுக்கல் வாங்கல் நிலப்பிரச்சினை தனிப்பட்ட முன்விரோதம் வாய் தகராறு போன்ற காரணங்களுக்காக நடந்துள்ளது. அரசியல் காரணங்கள் சாதிய , மதக் கொலைகள் முலையிலேயே கிள்ளி, குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது. பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன். ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்கு கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை.
பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை. தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையால் முடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு விடுவித்தது. மத்திய அரசு வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் ₹4,142 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், ஆனால் ₹732 கோடி தான் வழங்கியுள்ளது.
மத்திய அரசு தனது திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால் மாநில அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை அளிக்க முடியாத நிலை உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.