பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. பாலம் இடிந்ததில் நீரில் மூழ்கிய 7 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் பாலம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.
படாப்ஸ்கோ ஆற்றில் சென்ற பெரிய சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்க நேரப்படி இரவு 1:30 அளவில் பாலத்தின் தூண் மீது பலமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாலம் முழுவதுமாக உடைந்து ஆற்றில் விழுந்த நிலையில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கின.
நீரில் மூழ்கிய வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும் தண்ணீரில் மூழ்கியவர்கள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட தகவலில் தண்ணீரில் மூழ்கிய 7 பேர் மாயமானதாக தெரியவந்துள்ளது. இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சிங்கபூரைச் சேர்ந்த ‘டாலி’ என்ற கப்பலை மெர்ஸ்க் சரக்கு போக்குவரத்து நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் இதில் 2 பைலட்டுகள் உட்பட மொத்தம் 22 பேர் பணியாற்றி வந்ததாகவும் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கப்பல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் கீழ் படாப்ஸ்கோ ஆற்றில் செல்லும் கப்பல் வழித்தடம் மற்றும் போக்குவரத்தை நிர்வகிக்கும் அமெரிக்க நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.