சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய, 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைவராகவும், அவருடன் பேராசிரியர்கள் இந்துமதி எம்.நம்பி, மகேஷ்வரி, திருச்சி மண்டல நீர்வள தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, டிட்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உட்பட 6 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகாரபன் திட்டம் செயல்படுத்தியதால், நிலத்தடி நீர், மண்வளம், நீர்பாசன ஆதராங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.
மீத்தேன், ஷெல் கேஸ் திட்டத்திற்காக நிலத்தில் பெரிய அளவு துளையிடுவதால், நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளதா?, நிலத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது குறித்தும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. மேலும், டெல்டா பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்து, 4 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது