டில்லி,
பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக இதுவரை வங்கிகளில் 7 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 8ந்தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பழைய நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், புதிய நோட்டுக்கள் பெறவும் டிசம்பர் 30 வரை மத்திய அரசு காலஅவகாசம் கொடுத்துள்ளது.
மேலும் பணம் உள்ளவர்கள், மார்ச் 31ந்தேதி வரை, ரிசர்வ் வங்கிகளில் அதற்கான ஆவனங்கள் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் குறித்து, விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது,
மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான பிறகு, வங்கிகளில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள், சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளனர். இதில் இலக்குக்கு மேல் செலுத்தி உள்ள சுமார் 60 லட்சம் பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்க மாற்றினால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் வரி விலக்கு பெறுவதற்காக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.