மதுரை: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்து உள்ளார். அதன்படி பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது, சிட்டி எனப்படும் எலும்பு முறிவு சிகிச்சைக்கு மருத்துவம் செய்யும் மருத்துவமனை. இங்கு நேற்று இரவு 9.40 மணி அளவில் கணினி பிரிவு பகுதியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக கட்டுக்கடங்காமல் மருத்துவமனையின் நான்கு தலங்களுக்கும் பரவியதால் மருத்துவமனை யின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கும் மேலான நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு பரிதவித்தனர்.
இந்த கோர விபத்தில் மருத்துவமனையில் உள்ளே இருந்த சிறுவன் உள்பட 7 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியாததால் தீயில் கருகியும், புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-12-2024) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர், கோபிகா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அணைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.