அலெப்போ, சிரியா
சிரியா நாட்டின் அலெப்போ மாகாணத்தில் ஆப்ரின் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் கடுமையான வான் தாக்குதல்களை துருக்கி படைகள் நடத்தின.
சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஆப்ரின் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் கடுமையான வான் தாக்குதல்களை துருக்கி படைகள் நடத்தின அத்துடன், துருக்கி மற்றும் சிரியா படைகள் ஒன்றிணைந்து தரைவழி தாக்குதலும் நடத்தி உள்ளன.
குர்து இன போராளிகளை குறி வைத்து நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கைகளில், கொல்லப்பட்ட 10 பேரில் 7 பேர் அப்பாவி பொதுமக்கள், அவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம். மேலும் 2 பெண் போராளிகளும், ஒரு ஆண் போராளியும் உயிரிழந்தவர்களில் அடங்குவார்கள்.
‘ஆலிவ் பிராஞ்ச்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களையும், உயிர்ப்பலிகளையும் குர்து இன போராளிகள் அமைப்பான ஒய்.பி.ஜி.யின் செய்தி தொடர்பாளர் பிருஸ்க் ஹசாக்கே உறுதி செய்தார்.
மேலும் இந்த ஒய்.பி.ஜி. அமைப்பு விடுத்த செய்திக்குறிப்பில், அப்பாவி மக்களை பலி கொண்டு உள்ள இந்த தாக்குதல்களுக்கு ரஷியாவும், துருக்கியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி உள்ளது.