மதுரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் தருவதில் தாமதம் ஏன் என வினவிய உயர்நீதிமன்றம் மதுரை, ஆளுநர் மனசாட்சிப்படி விரைவில்  முடிவெடுக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ கல்வி பயில முடியாத சூழ்நிலையில்,  தமிழகஅரசு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வகையில்  7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் இதுவரை ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள்  ஏற்பட்டு இருப்பதாகவும், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக  5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், சட்ட மசோதா ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பிறகு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் பல ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு பிறகுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும்போது பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் கால அவகாசம் தேவையா,  , மக்களால் தேர்வு செய்யப்பட்ட பலர் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த சட்டத்துக்கு, ஆளுநர்  கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமாக உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டநிலையில் விரைவாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றனர்.
இதையடுத்து வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், இது போன்ற விஷயங்களில் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய போதிய அளவுக்கு கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று விதிகள் உள்ளன என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகள் எழாது என்பதன் காரணமாகத்தான் ஆளுநருக்கு காலக் கெடு விதிக்கவோ, உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனால், சூழ்நிலை, அவசரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஏழை மாணவர்கள் நலனை கருத்தில் கொள்வது அவசியமானது. நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை என்ற போதிலும், அவர், மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். இதுதான் நீட் தேர்வின் நிஜ முகம்..
தமிழகத்தில் ஜஸ்ட் 8 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் சீட்,  கர்நாடகாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோல உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்து, தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.