அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோருக்கு கிடைத்த பரிசப் பொருட்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது.
இதில் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி வழங்கிய 7.5 கேரட் வைரமானது மற்ற அனைத்து பரிசுப் பொருட்களைக் காட்டிலும் மிக விலையுயர்ந்த பரிசாகும்.
2023 ஆம் ஆண்டில் அதிபர் ஜோ பைடனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதரிடம் இருந்து 14,063 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ப்ரூச் மற்றும் எகிப்தின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியிடம் இருந்து USD 4,510 மதிப்புடைய ஒரு பிரேஸ்லெட், ப்ரூச் மற்றும் புகைப்பட ஆல்பம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி வழங்கிய 20000 அமெரிக்க டாலர் மதிப்புடைய (இந்திய மதிப்பில் ரூ. 17.15 லட்சம்) 7.5 கேரட் வைரம் மற்ற அனைத்து பரிசுப் பொருட்களைக் காட்டிலும் மிக விலையுயர்ந்த பரிசாகும்.
இந்த வைரம் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பிரிவில் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆவணக் காப்பகம் அல்லது அருங்காட்சியகத்தில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.
480 டாலருக்கு அதிகப்படியான மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்ற அமெரிக்க அரசு விதிகளின்படி இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சர்ச்சையில் சிக்கியுள்ள தென் கொரியாவின் ஜனாதிபதி சுக் யோல் யூனிடமிருந்து 7,100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நினைவு புகைப்பட ஆல்பம், மங்கோலியப் பிரதம மந்திரியிடமிருந்து 3,495 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மங்கோலிய வீரர்களின் சிலை.
புருனே சுல்தானிடம் இருந்து 3,300 அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெள்ளிக் கிண்ணம் உட்பட பல விலையுயர்ந்த பரிசுகளை அமெரிக்க ஜனாதிபதி பெற்றார்.
இஸ்ரேலின் ஜனாதிபதியிடம் இருந்து 3,160 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சுத்தமான வெள்ளி தட்டு மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் $2,400 மதிப்புள்ள படத்தொகுப்பு ஆகியவை இந்த பரிசுப் பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.