டில்லி,
நாடு முழுவதும் இன்று இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார்.
சிறப்பு மிகு இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளை சேர்ந்த 10 தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு காலை 9 மணிக்கு தொடங்கி, பகல் 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை பிரதமர் மோடி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.
விழாவின்போது, குடியரசுத் தலைவர் தேசிய கீதம் ஒலிக்க தேசியக் கொடி ஏற்றுவார். அதைத்தொடர்ந்து வீர தீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படும். டுவார். அசோக சக்கரா, கீர்த்தி சக்கரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, டில்லி குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக பைக் வீராங்கனைகளின் சாகசம், பிரம்மோஸ் ஏவுகணை அணிவகுப்பு, குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு என்.எஸ்.ஜி கமாண்டோ படைகள், ராணுவப்படைகள், விமானங்களை சுட்டு வீழ்த்தம் துப்பாக்கிகள் என அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜபாதையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டில்லியின் முக்கிய சந்தைகள், மக்கள் கூடுமிடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீசார், துணை ராணுவம், ராணுவம், கமாண்டோக்கள் என மொத்தம் 50 ஆயிரம் வீரர்கள் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.