சுமி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் போல்டாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரினால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் முக்கிய நகரங்களில் இருந்து வெளியேறும் வகையில், முக்கிய 4 நகரங்களுக்கு ரஷ்யா தற்காலி கமாக போர் நிறுத்தம் அறிவித்து உள்ளது. இதையடுத்து அந்த முக்கிய நகரங்களில் சிக்கி உள்ளவர்கள், அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகள் மீட்டு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல சுமியில் சிக்கியிருந்த 700 இந்திய மாணவர்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கி இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பேருந்து மூலம் போல்டாவா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
உக்ரைனிலிருந்து இதுவரை 17,100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.