சென்னை: 69% இட ஒதுக்கீடு விவகாரத்தில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு, மொத்த இட ஒதுக்கீடான 50% வருகிறதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவே உத்தரவிட்டது. மேலும், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2020 ஜூலையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மத்தியஅரசு நடைமுறைப்படுத்தவில்லை என கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இநத் வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது ஆஜரான மத்தியஅரசின் கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் எழவில்லை என்றார்.
அப்போது, திமுக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வில்சன். தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்தியஅரசு நடைமுறைப்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டியதுடன், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டதாகவும், மத்திய அரசின் 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வாதிட்டார். மேலும் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 விழுக்காட்டிற்குள் வருகிறதா, இல்லையா எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக மத்தியஅரசிடம் இருந்து விளக்கம் கேட்க அவகாசம் தேவை என மத்தியஅரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.