சென்னை: தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை  தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ரவி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 24ந்தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,  பொதுமக்கள் புத்தாடை வாங்குவதிலும், பட்டாசுகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகர்ப்புறங்களில் பணி நிமித்தமாக வசிப்பவர்கள், தங்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல தயராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் தமிழக தீயணைப்பு துறை சார்பில் தியாகராய நகரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இந்தப் பேரணியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ரவி தொடங்கி வைத்தார். தீயணைப்புத் துறை அதிகாரிகள், வீரர்கள், பள்ளி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீயணைப்பு துறை டி.ஜி.பி. பி.கே.ரவி (பிரஜ் கிஷோர் ரவி), தீபாவளி பண்டிகையையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாநிலம் முழுவதும் 1,610 கல்வி நிலையங்கள், 1,120 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதே போல், தீயணைப்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.