ஜூரிச்: உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான மின்னஞ்சல் தகவலை, த அசோசியேடட் பிரஸ் பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ஜெனிவாவில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எதுவுமில்லை என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. அங்கு, பல நாடுகளில் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை சுவிட்சர்லாந்திலும் அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்களில், கொரோனா தொற்றியோரில் பாதிபேர், வீட்டிலிருந்து பணிபுரிவோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தொற்று ஏற்பட்டோரில் 32 பேர், ஜெனிவா தலைமை அலுவலகத்தில் பணியாற்றுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.