டெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 63% பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில், 274 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், இதுவரை 4067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 109 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 292 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக உயர்ந்து வருவதாக தெரிவித்தவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், கையிருப்பில் உள்ளது என்று கூறினார்.
மேலும், நிகழ்ந்துள்ள கொரோனா இறப்புகளில், 63% உயிரிழப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே என்று கூறியவர், அவர்களில் 86 சதவிகிதம் பேர், நீரழிவு, பிரஷர் போன்ற பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெளிவு படுத்தினார்.