சென்னை: மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள் வந்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  மற்றும்  தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு காரகமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்தது.  அக்.13ந்தேதி முதல் 15ந்தேதி  வரை சென்னையில் மழை கொட்டியது. இதனால், 15, 16 தேதிகளில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தியது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன என்றும், மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 46 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்புப் பணிகளுக்காக 59 JCB-க்கள், 272 மர அறுப்பான்கள், நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவையும் களத்தில் இறக்கப்பட்டு சாலைகளில், தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது.  மேலும் பொதுமக்கள் உடனுக்குடன் தொடர்பாக அனைத்து துறை தரப்பிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், சென்னை பெரு வெள்ளத்தில் இருந்து தப்பியது.

இந்த நிலையில், மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள் வந்ததாக சென்னை மாகராட்சி தெரிவித்து உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டது. அதன்படி, மழையில் மாநகராட்சி பகுதிகளில் சாய்ந்த 64 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 200 பேர் வரை தங்கும் வகையில் 300 இடங்களில் அடிப்படை வசதிகளுடன் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 98 மைய சமையல் கூடங்கள் வாயிலாக உணவு சமைத்து வழங்கப்படுகிறது. கடந்த 2 தினங்களில் காலை வரை 7 லட்சத்து 18 ஆயிரத்து 885 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நீர்தேங்கியுள்ள 130 இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

மழைநீரை வெளியேற்ற பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  வெளிமாவட்டங்களிலிருந்து 303 மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது திடக்கழிவு மேலாண்மை பணிகளை 15,000க்கும் மேற்பட்ட தூய்மை ப்பணியாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. பொது சுகாதாரத் துறையின் சார்பில் சென்னையில் நாள்தோறும் 100 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

என கூறப்பட்டுள்ளது.