சென்னை:  தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த காலக்கட்டத்திற்கான  நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடப்பாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மீன்பிடி தடை கால  நிவராணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்” என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வழக்கமாக   ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், மீன்கள் குஞ்சு பொரிக்கும் காலக்கட்மான ஏப்ரல் மே மாதங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்பட உள்ளது.

  அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்கி  வரும் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தப்படும்.

 இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர்.  மீன்பிடி தடைக் காலத்தின்போது  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம்  நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தங்களுக்கு தற்போது மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டும் வரும் நிவராணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள மீனவர்கள்,  மீன்பிடித் தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என்று மீகோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது,  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.