நியூயார்க்:
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு உதவி மற்றும் பொருளாதாரத் தடைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வின் 28-வது அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலவித பயங்கரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 8,000 முதல் 10,000 வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறது. அவர்களில் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள், ரஷ்ய கூட்டமைப்பின் வடக்கு காகசஸ் பகுதியினர், பாகிஸ்தான், சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தைச் சேர்ந்த நபர்கள் ஆகியோர் அதிகம் உள்ளனர்.

வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களை அடக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டனர். அது டி.டி.பி., மற்றும் தலிபான்கள் இடையே மோதல்களுக்கு வித்திட்டது. இருப்பினும் முன்பை போலவே தற்போது இரு அமைப்புகளும் உறவை தொடர்கின்றன. 2019 டிசம்பர் முதல் 2020 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் டி.டி.பி., மற்றும் சில பிரிந்துச் சென்ற குழுக்கள் மீண்டும் ஒன்றிணைந்தது. அதற்கு அல்கொய்தா மத்தியஸ்தம் செய்துள்ளது.

தற்போது டி.டி.பி.,யில் உள்ள ஆயுதமேந்திய படையினர் எண்ணிக்கை 2,500 முதல் 6,000 வரை இருக்கும். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) அமைப்பு அடிப்படையில் பாகிஸ்தான் எதிர்ப்பு நோக்கங்களைக் கொண்டது. அதே சமயம் ஆப்கன் அரச படைகளுக்கு எதிராக தலிபான் படைகளை ஆதரிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.