சென்னை:

மிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் அதிமுக, பாமக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வரும் 18ந்தேதி ராஜ்யசபா நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா  உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி யுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல்  8ந்தேதி முடிவடைந்து, நேற்று( ஜூலை 9ம் தேதி)  வேட்புமனு பரிசீலனையும் நடைபெற்று முடிந்துள்ளது.இதுவரை போட்டியில் 7 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், வைகோவுக்கு மாற்றாக திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை  11ந்தேதி வாபஸ் பெறுவார் என  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.  திமுக சார்பில் போட்டியிடும்  ராஜ்யசபா வேட்பாளர்களான  சண்முகம் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியின்றி தேர்வாகின்றனர். அதுபோல  அதிமுக வேட்பாளர்கள், முஹம்மத் ஜான் சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக அன்புமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.