சென்னை: சென்னையை சுற்றி ஒரே இரவில் 6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும்,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக, செய்தித்தாள்களில் வெளி வந்த கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை போன்ற செய்திகளை சுட்டிக்காட்டி  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்களா ? சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தெரியாத கையாலாகாத விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். “காவல்துறையினருக்கு இனியாவது முழு சுதந்திரம் கொடுத்து, சமூக விரோதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்,   தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும், இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையும் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.