சென்னை: சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரி பகுதியில், சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தவர்கள்மீது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை உள்ளது. இதில், 24மணிநேரம் பேருந்துகள் உள்பட வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். இந்த நிலையில், அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில், இன்று காலை பணி நிமித்தமாக வெறு இடங்களுக்கு செல்லும் வகையில், ஏராளமானோர் நகரப்பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது, திடீரென திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள்மீது பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் , லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் கூச்சல் போட்டனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கும், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்தன மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து காலை 10மணி அளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதி போர்க்களம் காட்சி அளிப்பதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, திடீரென பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்கள் மீது மோதியதாகவும், அப்போது சாலையில் சென்ற இரண்டு இரு சக்கர வாகனத்தையும் கண்மூடித்தனமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கட்டுபாடு இல்லாமல் அதி வேகமாக வந்த டிப்பர் லாரி அங்கு இருந்த டிவைடரில் மோதி , அதனை அடுத்து மரத்திலும் மோதியது. மரத்தில் மோதியதில், மரம் முறிந்து கீழே விழுந்தது என்றும் தெரிவித்துள்ளார். . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.