பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்ச் 2 ம் தேதி இந்திய பங்கு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI – செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆரம்ப கட்ட விசாரணையில் அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்றும் இதனையடுத்து இந்த குற்றங்களை உறுதிசெய்ய விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் செபி மனு அளித்துள்ளது.

மோசடியான பண பரிவர்த்தனைகள், கார்ப்பரேட் நிர்வாக விதிமுறைகள், குறைந்தபட்ச பொது பங்குதாரர் விதிமுறைகள் மற்றும் பங்கு விலை கையாளுதல் என பல்வேறு வகையில் அதானி நிறுவனம் விதிமீறல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்த அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் செஸ், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் தேவையான ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை செபி கோரியுள்ளது.

2009-10ம் ஆண்டு முதல் இந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள், போர்டு மீட்டிங் மற்றும் தணிக்கை கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவாதங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல், பெற்ற கடன்கள் மற்றும் வழங்கப்பட்ட கடன்கள், கடன்களுக்கான காரணங்கள் போன்ற பல்வேறு ஆவணங்களையும் செபி கோரியுள்ளது.

இந்த அனைத்து விவரங்களையும் ஆராயவும் விவரங்களை சேகரிக்கவும் குறைந்தது 15 மாதம் தேவைப்படும் என்றபோதும் 6 மாதகாலத்திற்குள் இந்த விசாரணையை முடிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக செபி தெரிவித்துள்ளது.