துபாய்
அனுமதி இன்றி செல்ஃபி எடுத்துக் கொள்வோருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 5 லட்சம் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்படும் என அமீரகம் அறிவித்துள்ளது.
பிரபலங்களை எங்கு கண்டாலும் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆர்வம் தற்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது. மக்களுக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் பிரபலங்களில் பலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ்நாட்டில் ஒரு மூத்த திரை நடிகர் அவ்வாறு அனுமதி இன்றி செல்ஃபி எடுத்தவர் மொபைலை தட்டி விட்டது மிகவும் சர்ச்சையை கிளப்பியது நினவில் இருக்கலாம்.
ஐக்கிய அரபு அமீரக அரசு இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அனுமதி இன்றி செல்ஃபி எடுத்துக் கொள்வோர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த தண்டனை அதிக பட்சமாக ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை மற்றும் சுமார் 5 லட்சம் திர்ஹாம் (சுமார் ரூ.94.2 லட்சம்) வரை அபராதமாக இருக்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமீரக பெண் வழக்கறிஞர் நௌரா சலே, “திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளிலும் செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது பலராலும் விரும்பப்பட்டாலும் அவர்களுடைய தனிப்பட்ட உரிமையில் தலை இடுவதாகும். ஆகவே அனுமதி பெறாமல் செல்ஃபி எடுப்பது குற்றம் என சொல்வது சரியானதாகும்” என தெரிவித்துள்ளார்.