மும்பை: இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து, மொத்தம் 6 பேர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான பட்டியலில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸன், முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும், இலங்கைப் பயிற்சியாளருமான டாம் மூடி, முன்னாள் மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டரும், ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளருமான ஃபில் சிம்மன்ஸ், முன்னாள் இந்திய அணி மேலாளர் லால்சந்த் ராஜ்புத், முன்னாள் இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் ஆகியோர்தான் அந்த இதர 5 பேர்.

இந்த 6 நபர்களும், கபில்தேவ் தலைமையிலான குழுவின் முன்பாக தத்தம் செயல்திட்டங்களை அளிப்பார்கள். அந்தக் குழுவில் கபில்தேவ் தவிர, அன்ஷுமன் கேக்வாட் மற்றும் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

யார் தலைமைப் பயிற்சியாளர் என்ற முடிவு இந்த வாரத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்தின் துவக்கத்திலோ எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலியின் ஆதரவு தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.