சென்னை:
6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இவை, உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் தடுப்பு செலுத்திக் கொள்ள விரைகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை என்றும் அவ்வப்போது மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒரு நாள் தேவையையே பூர்த்தி செய்யவில்லை என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.

இதனால், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கிய மத்திய அரசு கூடுதலாக 6 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது.

இந்த நிலையில், பூனேவில் இருந்து 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 34 பார்சல்களில் தடுப்பூசி வந்தடைந்தது. அவை குளிர்சாதன வாகனம் மூலம் பெரியமேட்டில் உள்ள மருத்துவ கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.