சென்னை: திருப்பதியில் சொர்க்க வாசல் டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து இருக்கும். இதை காண பல லட்சம் பேர் திருப்பதியில் குவிவார்கள்.
இதையடுத்து, ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்து ஏழுமலையான வழிபட இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் 94 கவுண்டர்களை அமைத்துள்ளது. அந்த கவுன்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால், இலவச டோக்கன்களை பெற ஒரே பகுதியில் அளவுக்கு அதிகமாக பல ஆயிரம் பேர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர் டோக்கனை பெற வரிசையில் செல்லாமல், காவல்துறையினரின் உத்தரவையும் மதிக்காமல் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நுழைய முயன்றதால் கவுன்டர்கள் முன்பு கடும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார் அவர்களை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பதி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆத்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.