அர்பட்
ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு துருக்கி நாட்டு பிரிவினைவாதிகள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இங்கு ஆட்சி செய்து வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அவர்களை ஒழிக்க தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
எனவே அதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் குர்திஸ்தான் ஆதரவு போராளிகள் பெருபான்மையினத்தவர்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இருதரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டுப் போர் பதற்றம் மிகுந்த பகுதியாக உள்ளது.
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் குர்திஸ் பிராந்தியத்திற்குட்பட்ட சுலைமானியாவில் இருந்து 50 கி.மீ தூரத்தில் அர்பட் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள விமான நிலையத்தை குர்திஸ்தான் ஆதரவாளர்கள் போர் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தி வந்தனர்.
துருக்கி ராணுவத்தினர் ராணுவ முக்கியத்துவம் பெற்ற இந்த விமான நிலையத்தை தகர்க்க திட்டம் தீட்டி வந்தனர். நேற்று நவீன தொழில்நுட்பம் கொண்ட டிரோன்களை ஏவி விட்டு அர்பட் விமான நிலையத்தின் மீது துருக்கி ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
குர்திஸ்தான் ராணுவத்தினர் இதை எதிர்பார்க்காததால் விமான நிலையத்திற்குள் புகுந்த டிரோன்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியும் டிரோன்களின் அதிரடி தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். டிரோன்கள் குண்டுமழை பொழிந்து விமான நிலையத்தைத் தகர்த்தன.
இந்த டிரோன்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் குர்திஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையம் தரைமட்டமாகி குப்பை மேடாகக் காட்சி அளித்தது. தாக்குதலில் குர்திஸ்தான் ஆதரவு போராளிகள் 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து குர்திஸ்தான் ஆதரவு தலைவர் பாவேல் தலபானி துருக்கியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் படுகாயம் அடைந்தவர்கள் நலம் பெற வேண்டி ஆறுதல் தெரிவித்துள்ளார்.