சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று புதிதாக இரண்டாயிரத்து 708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,956 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று நாலாயிரத்து 14 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 29 ஆயிரத்து 268 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று
தமிழகத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 747 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் கொரோனாவில் இருந்து ஆயிரத்து 482 பேர் நலம் பெற்றதன் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிற மாவட்டங்களை பொறுத்தவரையில், செங்கல்பட்டில் 143 பேரும், கோவையில் 253 பேரும், சேலத்தில் 165 பேரும், திருவள்ளூரில் 133 பேரும், திருப்பூரில் 109 பேரும், காஞ்சிபுரத்தில் 119 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.