தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியதும், தண்டால் எடுத்த நிகழ்வும் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதே நிகழ்ச்சியில் நடந்த மற்றொரு சுவாரசியமான நிகழ்ச்சி தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
மார்ச் 1 ம் தேதி முளகுமூடு பகுதியில்புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்த்தாண்டம், காஞ்சாம்புரத்தைச் அடுத்த கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்த பியூலெட் ஜெனி சுபா என்ற தற்காலிக ஆசிரியை, தனது மகளை இஸ்ரோ-வை சுற்றிப்பார்க்க அனுமதி பெற்று தரவேண்டும் என்று வைத்த கோரிக்கை தான் அந்த சம்பவம்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி தான் வரும் வழியில் பரைக்கோடு பகுதியில் பெலிக்ஸ் ஜாம், என்ற மாணவன் தான் இஸ்ரோ செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு தான் ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை நேரலையில் தனது வீட்டில் இருந்து பார்த்த பியூலெட் ஜெனி சுபா மற்றும் ஜெயச்சந்திரன் தம்பதியின் மகள் ஜிஃபா ஜெ.பிரிட்லி தனது தாய் பியூலெட்டுக்கு போன் செய்து, தானும் இஸ்ரோ செல்ல ஆசைப்படுவதாகவும் தனக்கும் அனுமதி பெற்றுத்தர கேட்குமாறு தன் தாயிடம் கூறினார்.
தயக்கத்துடன் இதனை அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியிடம் கேட்ட பியூலெட்டின் விவரங்களை தனது உதவியாளர் மூலம் சேகரித்ததுடன், பல குழந்தைகள் இதுபோல் கேட்பதுண்டு ஆனால் அங்கு சென்று திரும்பிய பின் அவர்களின் ஆர்வம் குறைந்துவிடுகிறது என்று தெரிவித்திருந்தார்.
ஓரிரு தினங்கள் கழித்து, இஸ்ரோ தலைவருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்துடன், ஜிஃபா ஜெ.பிரிட்லி இஸ்ரோ சென்று பார்க்க அனுமதி கடிதமும் வந்தது அவர்களை ஆச்சரியமூட்டியது. கொரோனா விதிமுறைகளுக்கு இணங்க, அவர்கள் மார்ச் 22 ம் தேதி இஸ்ரோவை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்ரோவில் தான் பார்த்த விவரங்கள் குறித்து பெருமைப்பட பேசிய அந்த ஐந்தாம் வகுப்பு மாணவியான ஜிஃபா, வரும் காலத்தில் தான் விண்வெளியில் சென்று ஆய்வு செய்யப்போவதாக உறுதிபட கூறியதோடு ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்தார்.
தலைவர் @RahulGandhi அவர்களின் #முளகுமூடு வருகையின் போது, 5-வது படிக்கும் குழந்தை Jifa-வின் கோரிக்கையை ஏற்று ISRO- விற்க்கு சென்று வருவதற்க்கு அனுமதி வாங்கி கொடுத்துள்ளார்.
உங்களை தலைவராக ஏற்றுக் கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன். pic.twitter.com/84ADzGkIQQ
— J G Prince MLA (@advjgprince) April 19, 2021
ஏற்கனவே, பரைக்கோடு பகுதியில் ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தபோது வழியில் சில சிறுவர்களை அழைத்துப் பேசினார். அதில் ஆன்டனி பெலிக்ஸ் என்ற மாணவர், தனக்கு ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் இருப்பதாகவும், ஸ்கூலில் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
டெல்லி சென்ற ராகுல் காந்தி மாணவன் ஆன்டனி பெலிக்ஸுக்கு ஷூ வாங்கி அனுப்பி வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு மாணவி தனது தாய் மூலம் வைத்த அன்பு கோரிக்கையை ஏற்று அவரை ஊக்கப்படுத்தியது அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.