சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை

ஆணோ, பெண்ணோ, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரிடம் உங்களுக்கு வாழ்க்கையின் எந்த பருவம் திரும்பக் கிடைக்க ஆசைப்படுவீர்கள் என்று கேட்டால், அவர்கள் சொல்வது குழந்தைப் பருவமாகத்தான் இருக்கும் ..

இனிமைகளை அள்ளிஅள்ளித்தரும் இளமைப்பருவம் கூட, கள்ளம் கபடம் கூடியதுதான். அப்படி இல்லாத ஒன்றே ஒன்று, குழந்தைப் பருவம் மட்டுமே. அதனால்தான் அதை எல்லோருமே கேட்பார்கள்.

ஆனால் நமது மத்திய மாநில அரசுகளோ, அந்த குழந்தை பருவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கொலைவெறியோடு செயல்படுகின்றன. பெற்றோர்களும் இதற்குஎதிர்ப்பு தெரிவிக்காமல், உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் உச்சகட்ட கொடுமை.

இருதினங்களுக்கு முன்பு நெல்லை செய்துங்கநல்லூரில், சரியாகப் படிக்கவில்லை என்று சொல்லி ஆசிரியர் திட்டியதால், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யோசித்துப் பாருங்கள், அந்த பெண் கல்வியோடும் வாழ்ந்திருக்கலாம், கல்வி இல்லாமலும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடுமையான கல்வி என்ற ஆயுதம் முன், ஆளே இல்லாமல் போய்விட்டார்.

ஒரு குடும்பத்தில் குழந்தை என்பது, சாமான்யமான விஷயமா? பிள்ளைப்பேருக்காக ஏங்கி ஏங்கி அது கிடைத்ததிலிருந்து, ஆணும் பெணும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு, இருவரின் வாழ்க்கையையும் அந்த குழந்தைமேல்தானே ஒருசேர காட்டுகிறார்கள்.

குழந்தை சாப்பிட்டதா, தூங்குகிறதா, உடல்நலத்திற்கு ஏதாவது பாதிப்பா? என 24 மணிநேரமும் எத்தனை விதமான கவலைகள்.. வம்சத்தை தழைக்க வைக்கும் அந்த குழந்தைதானே குடும்பத்திற்கே அச்சாணி,? அதன் எதிர்காலத்திற்குத்தானே அப்பாவும் அம்மாவும் ஓடிஓடி சம்பாதிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட குழந்தைகள், அநியாயமாக கல்வி என்ற பெயரால் இன்று பலிவாங்கப்பட்டு வருகின்றன என்பதை என்னவென்று விவரிப்பது. .

கல்வி கல்வி.. தேர்வுகள், தேர்வுகள், மதிப்பெண்கள், மதிப்பெண்கள்.. என்று, எங்கு திரும்பினாலும் ஏன் இவ்வளவு வெறித்தனம்.? என்ன ஆயிற்று இந்த சமூகத்திற்கு?

சிறுவர்-சிறுமியர் ஆக இருக்கும்போது அவர்களுக்கு பெரியவர்களின் உடைகளை போட்டு கண்ணார அழகு பார்க்கிறார்கள். குழந்தகளை பெரியவர்கள் கோலத்தில் பார்க்கவேண்டும் என்ற கட்டுப்படுத்தமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு அது.

அதே சிறுவர்-சிறுமியர் வயதுக்கு மீறிய ஒழுங்கீனமான காரியங்களில் ஈடுபட்டால், பெற்றோர் சும்மா இருப்பார்களா? பதறிப் போக மாட்டார்களா? இந்த சின்னவயசில் இதெல்லாம் உனக்கு கேக்குதா என்று கேட்டு அவர்களை வெளுக்கமாட்டார்களா??

ஆனால் பாருங்கள். தங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை விட, பிஞ்சு வயதிலேயே மேதைகளாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். வயதுக்கு மீறிய தகுதிக்கு மீறிய விஷயங்களை பிள்ளைகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்கள்.

இவர்களைவிட இன்னும் ஜெட் வேகத்தில் பறக்கிறது மத்திய மாநில அரசுகள்.. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவிக்கிறது மத்திய அரசு. அதை கொஞ்சமும் கூச்சமில்லாமல் தமிழக அரசும் ஆமோதிக்கிறது

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் என்ன கேட்கிறார் தெரியுமா? கேட்கும்போதே புல்லரித்துப் போகிறது..

எல்கேஜி குழந்தைகளுக்கெல்லாம் நேர்முகத்தேர்வு வைத்து நடத்துவதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமே ஏன் எதிர்க்கிறார்கள்?

மூன்றுவயதுகூட நிரம்பாத குழந்தைகளுக்கு எல்கேஜி வகுப்புக்காக நேர்முகத்தேர்வு நடத்துவதே அயோக்கியத்தனம் என்று, அமைச்சருக்கு ஏன் தோன்றவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். .

முதலில் அரசுகளும் சரி பெற்றோரும் சரி, கல்வி என்றால் என்ன என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கைக்கு கல்வி மிகவும் அவசியமே தவிர, கல்வியே முழுக்க முழுக்க வாழ்க்கை என்றாகி விடாது..

கல்வியைப் பொருத்தவரை அதனை பெறுபவர்களுக்கு அது வெவ்வேறு பலன்களைக் கொடுத்து வெவ்வேறு தளங்களில் பயணிக்க செய்யக்கூடியது. குறிப்பிட்ட இந்த கல்வியை கற்றவர், கடைசிவரை இந்த வேலையை தான் செய்வார், செய்தே ஆகவேண்டும் என்றெல்லாம் தீர்மானித்து விட முடியாது.

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை நியாயப்படுத்தும் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சராவதற்கு என்று தனியாக படிப்பு படித்துவிட்டு வந்தாரா? இல்லை அமைச்சர் ஆவதற்கு என, தனியாக படிப்புதான் ஏதாவது இருக்கிறது.

உலகம் முழுவதும் படிப்பது ஒன்று, பிழைப்பது வேறொன்றுதான் என பெரும்பாலானோரின் வாழக்கையாக அமைகிறது.

பொதுவாக கல்வி முடித்தவர்கள், அரசாங்க வேலைக்கு செல்வார்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்வார்கள் , சுய தொழில் ஆரம்பிப்பார்கள், வர்த்தகத்திற்கு போவார்கள், இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அவை வெற்றிகரமாக நடந்தால் அதுதான் கல்வி தந்த உண்மையான வெற்றி. டாக்டர், எஞ்சினியர், வழக்கறிஞர் போன்ற படிப்புகளை படிக்க கிடைத்த வர்கள்தான் அறிவாளிகள், மற்றவர்களெல்லாம், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அர்த்தமாகிவிடமுடியுமா? உலகமே அதிகமாய் படித்த மேதைகளால்தான் ஒவ்வொரு அங்குலத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிறதா?

ஒரு விஷயத்தை அனைவரும் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளை மேதைகளாக்க விருப்பப்படலாம் தவறில்லை. ஆனால் குழந்தைப்பருவத்திலேயே மேதைகளாக்கியே தீருவோம் என பேராசைப்படக்கூடாது. அது பேராசைக்கூட இல்லை. குழந்தை பருவத்தையே படுகொலை செய்கிற காட்டுமிராண்டித்தனமான செயல். அவ்வளவு ஏன் காட்டுமிராண்டிகள்கூட, இப்படி கல்வி விஷயத்தில் மூளைகெட்டுபோய் வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அப்புறம் எதற்காக குழந்தைகளை மேதைகளாக்கியே தீருவோம் என்று பெற்றோரும் அரசுகளும் இப்படி வெறிபிடித்து அலைகின்றன?

தினமும் ஒய்வே இல்லாமல் ஓயாமல் படித்து, நிறைய மார்க் எடுத்து நுழைவுத்தேர்வுகள் எழுதி உயர்கல்வி பெற்று, நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்குவதை ஒன்றே, உண்மையான கல்வி என்று போதிக்கப்படுவது சைக்கோத்தனம் என்பது இவர்களுக்கு புரியவில்லையா?

கல்வி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. ஆனால் கல்வியே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்பது பல பேருக்குத் தெரிவதில்லை. இவர்கள் சொல்லும் கல்வி இருக்கிறது, தற்கொலை செய்துகொண்ட நெல்லை பத்தாம் வகுப்பு மாணவிதான், இப்போது நம்மிடையே இல்லை.

இப்போது தமிழ்நாட்டை ஆளுவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி, இதனை 1972ல் நிறுவியவர், எம்ஜிஆர். அவர் 1977ல் முதலமைச்சராக வந்த பிறகு, சிறுவர், சிறுமியர் பெருமளவில் தொடக்ககல்வியிலேயே ஏன் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்? ஏன் இந்த பள்ளி இடைநில்லல் பெருகியபடியே இருக்கின்றன என்று யோசித்தார்..

கிராமப்புறங்களில் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் வகுப்புகள் என்ற அளவிலேயே, படிப்பு மட்டுமின்றி பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவியர் பெயிலாக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்தது. ஜந்தாம் வகுப்பை எட்டுவதற்கு முன்பே பல ஆண்டுகள் பள்ளிகளில் படிக்கவேண்டிய நிலை வந்ததால் வெறுப்படைந்த பெற்றோர், பிள்ளைக்கு படிப்பும் அறிவும் அவ்வளவுதான்போல என தீர்மானித்து அத்தோடு படிப்பு மூடுவிழா நடத்தி ஆடுமாடு மேய்க்கவும் பல்வேறு வேலைகளுக்கும் அனுப்பினர்.

கிராமப்புறத்து சாமான்ய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், உங்கள் தாத்தா, பாட்டிகளை கேட்டுப்பாருங்கள், மூணாம் கிளாஸோட நிறுத்திட்டாங்க, நாலாங்கிளாஸோட நிறுத்திட்டாங்க என்றே பெரும்பாலானோரிடமிருந்து பதில்வரும்.

இந்த கொடுமையை ஒழிக்கத்தான் ஐந்தாம் வகுப்புவரை ஆல் பாஸ் திட்டத்தை எம்ஜிஆர் கொண்டுவந்தார். பின்னர் அது எட்டாவதுவரை நீட்டிக்கப்படடது..சிறுவர் சிறுமியர் பெயில் என்ற விஷயமே இல்லாமல் படித்ததால், தமிழகம் முழுவதும் பள்ளியில் இருந்து நிற்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைய ஆரம்பித்தது.

தொடர்ந்து படிக்க ஆரம்பித்ததால், போகப்போக மாணவ மாணவியர் கல்வியில் முன்னேற்றம் கண்டனர். 80களில், பட்டப்படிப்பு முடித்தவர்களெல்லாம், தொடக்கப்பள்ளிகளில் கடுமையாக திணறியவர்கள்தான். வறுமை உள்ளிட்ட பல காரணங்கள் படிப்புக்கு தடையாய் இருந்த காலம் அது.

சத்துணவு, இலவச பாட புத்தகங்கள், காலணிகள், டூத் பவுடர் என எம்ஜிஆர் ஆரம்பித்து வைக்க, பள்ளிக்கே, வராத பிள்ளைகள்கூட அரசு பள்ளிகளை நோக்கி ஓடி வந்தனர். எட்டாவதோ, பத்தாவதே முடித்தால்கூட சாமான்ய மக்கள் அரசாங்கத்தில் ஏதோ ஒரு பியூன் வேலையிலாவது நுழைய வழிவகுத்தது. அடுத்தடுத்து வந்த கலைஞர். ஜெயலலிதா அவர்கள் ஆட்சியிலும் பள்ளிக் கல்வியை வளர்க்கத்தவறவில்லை. இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச லாப்டாப் வரை இன்று அரசாங்கம் மாணவ மாணவியருக்கு வாரி வழங்குகிறது..,

இப்படி பிஞ்சுக்களை பயமில்லாமல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியை படிக்கவைத்ததால்தான், அவர்கள் படிப்படியாக கற்றலில் பிக்அப் ஆகி பின்னாளில் உயர்கல்வியை நோக்கி தைரியமாக ஓடினார்கள் அதனால்தான் இன்று நாட்டிலேயே உயர்கல்வி விகிதத்தில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

நிலைமை இப்படியிருக்க, அண்மைக்காலமாக பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதைவிட தொடர்ந்து தேர்வுகளை எழுதவே அதிக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கின்றனர்.

ஏற்கனவே பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பள்ளிகளை என்ன லட்சணத்தில் கொண்டுபோய்விட்டுள்ளது என்பது தெரியவில்லையா? ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரையாண்டு முடிந்ததுமே பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்த ஆரம்பித்து சாகடிக்கின்றனர். பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள், பதினோராம் வகுப்பிலேயே பல பள்ளிகளில் நடத்தி கொலையாய் கொல்கின்றனர். பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் மாணவர்கள் அதிக மார்க் எடுக்கவில்லையென்றால் அவன் வாழ்க்கை மட்டுமல்ல, அவன் குடும்பம், ஒட்டுமொத்த வம்சமே அழிந்துபோய்விடும் என்பதுபோல் பயம் காட்டுகின்றனர்.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டை பாருங்கள், போர்க்களத்தைவிட மோசமாக இருக்கும். காலை மற்றும் மதிய உணவை ஐந்தரை மணிக்கே சமைத்து தலையில் கட்டி ஆறரை மணிக்கு பிள்ளைகளை துரத்துவார்கள்.. ஏழு மணிநேரத்துக்கு முன்னாடி சமைக்கப்பட்ட உணவை, ஒரு பிள்ளை மதியம் சாப்பிட்டாக வேண்டும். இதுவா கல்வியை கற்றுத்தரும் லட்சணம்?

ஒரு பக்கம் விளையாட்டு என்பதே அந்த பிள்ளைகளுக்கு கிடையாது, விடுமுறைகளும் போதிய அளவில் கிடையாது, பிள்ளைகளும், வெளியூர் போகமுடியாது, அவர்களுக்காக பெற்றேரும் ஒரு நல்லது கெட்டதுக்காக வெளியே எங்கும்போகமுடியாது. எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள், ‘’இந்த வருஷம் பிள்ளைக்கு பப்ளிக் எக்ஸாம்… அதனால நான் எங்கே வர்றது’’

இப்படித்தான் பொதுத்தேர்வு பயம் காட்டி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சித்ரவதை பள்ளிக்கூடங்கள் உருவாகி கோடி கோடியாய் வாரிக்குவித்தன.

இப்போது,நீட், தாட் பூட் என நுழைவுத்தேர்வுகளை காட்டி கோச்சிங் சென்டர்களை கொண்டுவந்து பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நீண்ட இடைவெளி விட்டு தேர்வுகள் எழுதினால்தான் தேர்வுக்கே மரியாதை.. எதற்கெடுத்தாலும் எப்போது பார்த்தாலும் தேர்வுகளையே எழுதிக்கொண்டிருந்தால் அதற்கு மரியாதையே கிடையாது.

நீட் போன்ற உலகமகா அறிவாளி தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களின் பொது அறிவை சோதித்துப்பாருங்கள். சாதாரண பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது கேட்டுப்பாருங்கள், அப்போது தெரியும் நுழைவுத்தேர்வுகளின் மகிமை.

சிறு பிள்ளைகளுக்கு தேவை கவலையில்லா கல்வி, வயதுக்கேற்ற கல்வி, எளிமையான கல்வி, எல்லாவற்றையும்விட, குழந்தைப்பருவத்தையும் பதின் பருவத்தையும் கொன்றுபோடாத கல்வி..

இதை கொடுக்க துப்பில்லாதவர்கள், கொத்துக் கொத்தாய் மக்களை கொன்று குவிக்கும் இரக்கமற்ற தீவிரவாதிகளைவிட பல மடங்கு கொடியவர்கள், அது அரசாங்கமாகவே இருந்தாலும்.

மக்களை நேசித்த தலைவர்கள், பிள்ளைகளை பயமில்லாமல் படிக்கவகை செய்தார்கள். அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் அடுத்த தலைமுறை தலைவர்கள், பிள்ளைகள் படிப்பதை தொடக்கக்கல்வியிலேயே எவ்வளவு தடுக்கமுடியுமோ அவ்வளவையும் செய்ய, முட்டுக்கட்டைகளாக போடுகிறார்கள்..