சென்னை: அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட பாக்கெட் உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒப்புதல் வழங்கியது. அதன்படி அரிசி, கோதுவை உள்பட பாக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கவும் . சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விகிதம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு ஜூலை 18ந்தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி
- பள்ளி மாணாக்கர்கள் உபயோகப்படுத்தும், பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்-சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக் அல்லது அதையொத்த வரைபடங்கள், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்புத் திட்டங்கள் மற்றும் உலக உருண்டைகள் உள்பட அனைத்து வகையான விளக்கப்படங்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. அமலாகிறது.
- பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது.
- இதைப்போல தூய்மை எந்திரம், வரிசைப்படுத்தல் அல்லது தரம் பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு வகைகள், அரவை எந்திரம், பவன் சக்கி மற்றும் வெட் கிரைண்டர் ஆகியவற்றின் வரியும் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயருகிறது.
- சோலார் வாட்டர் ஹீட்டருக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்படுகிறது.
- வங்கி காசோலைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது.
- மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வரையிலான ஓட்டல் அறை வாடகைக்கு 12 சதவீதமும்,
- நாள்ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆஸ்பத்திரி அறை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) வாடகைக்கு 5 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
- உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
- சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுடுகாடுகளுக்கான பணி ஒப்பந்தங்களுக்கும் 12-ல் இருந்து 18 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது
- பேட்டரி பேக் பொருத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. சலுகை அளிக்கப்படுகிறது.
- எரிபொருள் விலையை உள்ளடக்கிய லாரி மற்றும் சரக்கு வண்டிகளின் வாடகை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.