சென்னை: தென்னிந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 58% கூடுதலாக மழை பொழிந்துள்ள தாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது
தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது. ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர். அப்போது இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது இந்த நிலையில் அக்னி நட்சத்திரமும் மே 4ந்தேதி தொடங்கியதும் மேலும் வெயில் கொளுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வப்போதை கோடை மழை பொழிந்து வெயிலின் உக்கிரத்தை தணித்து வருகிறது. வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், கடலூர், தென்காசி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த மே 9 முதல் 15 வரை இயல்பை விட கூடுதலாக 58% மழை பெய்துள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் 16.4 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 25.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், இன்று முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 -45 கி.மீ வரையிலும், அதிகபட்சமாக 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.