சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 56 கழக உறுப்பினர்கள், தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கட்சி தலைமை அறிவித்துள்ள வேட்பாளர்களை எதிர்த்து திமுக, அதிமுக என முக்கிய கட்சிகளில் சிலர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளதும், சிலர் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோன்றவர்களை கட்சி தலைமை பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுபோல, திமுகவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, ,கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்தபட்டியலில், சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி, 7-வது வட்டச் செயலாளர் பி.ஆதிகுருசாமி – மாதவரம் வடக்கு பகுதி, 23வது வட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் என்.மேனகா நித்யானந்தம், சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி,92வது வட்டத்தைச் சேர்ந்த கே.நீலகண்டன், 144வது வட்டத்தைச் சேர்ந்த பகுதி துணைச் செயலாளர் எம்.எம்.சீதாபதி,
மற்றும், சேலம் மத்திய மாவட்டம், சேலம் மாநகர துணைச் செயலாளர் திருமதி லலிதா சுந்தரராஜன் உள்ளிட்ட 56 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்.