டில்லி

பிரதமர் அறிவித்த ‘பெண் குழந்தைகளை பெறுவோம், பெண் குழந்தைகளைப் பேணுவோம்’ திட்டத்தின் நிதியில் 56% விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் வருடம் ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி’பெண் குழந்தைகளை பெறுவோம், பெண் குழந்தைகளை பேணுவோம்’ என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை நாடெங்கும் குறைந்து வருவதை தடுக்க இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து செயல்பட்டன.

இந்த திட்டம் தொடங்கி 4 வருடம் ஆகி உள்ளது. இந்த திட்டத்துக்கான செலவு விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் மாநிலங்கள்மற்றும் மாவட்டங்களுக்கு 25% க்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல் கட்டத்தில் 19%க்கு மேல் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. அதே வேளையில் இந்த திட்டத்துக்கான விளம்பரத்துக்கு மட்டும் 56% நிதி செலவிடப் பட்டுள்ளது.

இந்த மாதம் 4 ஆம் தேதி மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மத்திய இணை அமைச்சர் வீரேந்திர குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.644 கோடியில் ரூ.159 கோடி மட்டுமே மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசால் அளிக்கப்பட்டுள்ளது என அந்த பதிலில் தெரிய வந்துள்ளது.

செலவுகளின் விவரங்கள்

ஒதுக்கப்பட்ட                 அளிக்கப்பட்ட நிதி விவரங்கள்
வருடம்             நிதி (கோடிகளில்)                மாநிலங்கள்        விளம்பரம்
2014-15                      50                                             13.37                           18.91
2015-16                      75                                             24.54                            29.73
2016-17                       43                                               2.9                             29.79
2017-18                    200                                              33.2                           135.71
2018-19                    280                                             70.63                          155.71