சென்னை: அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கையில் எடுத்த தமிழகஅரசு, அங்கு தேவைக்கு அதிகமாக நியமிக்கப்பட்ட வர்களை பணியாற்றம் செய்ய முடிவெடுத்தது. அதைத்தொடர்ந்து,. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகமாக பேராசிரியர்கள் , அலுவலக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அரசு கல்லூரிகள் , பல்கலைக் கழகங்கள், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றப்பட்டு பணி நிரவல் செய்து முடிக்கும் வரை எந்தப் பல்கலைக்கழகமும் புதிதாக எந்த வகையான நியமனங்களை மேற்கொள்ள கூடாது என கூறியிருந்தது.
அதைத்தொடர்ந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 369 உதவி பேராசிரியர்கள் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 545 பேராசிரியர்கள் மற்றும் 2645 அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 545 பேராசிரியர்களை அவர்கள் பணியாற்றும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை, அரசுக்கு அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.