சென்னை:
பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர். அதற்காக 5 மணி நேரம் அவர்கள் போராடி உள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர். திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்த பசுமாடு, அண்மைக்காலமாக உடல்நலம் குன்றி காணப்பட்டது.
போதிய அளவு பால் கொடுக்காமல் கடும் சிரமத்துக்கு ஆளாவதை மாட்டின் உரிமையாளர் அறிந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த பிரச்னை இருப்பதை அறிந்த அவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை அணுகினார்.
அந்த பசுமாட்டை மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதித்தது. எக்ஸ்ரே சோதனையில் மாட்டின் வயிற்றின் உள்ளே கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி, பசுமாட்டுக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
அந்த கழிவுகளை கண்ட மருத்துவர்கள் குழு சற்றே அதிர்ந்து போனது. அதாவது 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பசுமாட்டின் வயிற்றின் உள்ளே இருந்திருக்கிறது. அதில் மருத்துவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஊசிகளும் அதிகளவு இருந்திருக்கின்றன.