மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.
நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலமாகும். இந்த மாநிலத்தில் மட்டும் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 3651 ஆக உள்ளது. இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர். 365 பேர் குணமடைந்துள்ளனர்.
இந் நிலையில் வீடியோ மூலம் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஒரு செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: இதுவரை 66000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண மண்டலங்களில் நாளை முதல் ஆலைகள் சில நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி தரப்பட்டு உள்ளது.
அந்த ஆலைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேவையான தங்குமிடத்தை ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இங்கே இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது பற்றி கவலை கொள்ள தேவையில்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அவர்கள் சொந்த ஊர் செல்ல அரசு உதவி புரியும் என்றார்.