சென்னை: கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவளைதளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புடன் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் தொடங்கி உள்ள நிலையில், அதை வைத்து, போலியான பல தகவல்கள் உலா வருகின்றன. சமீப நாட்களாக பலருக்கு போனில் 50GB டேட்டா தருவதாக குறுந்தகவல்களும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு பதிவுகளும் வெளியாகி, பொதுமக்களிடையே ஆசையை தூண்டி வருகின்றன. இதுபோன்ற செய்திகள் போலியானது, இதன்மூலம் யாரும் ஏமாற வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும். எனவே இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளை கண்டால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.