மும்பை

ஊரடங்கு உத்தரவால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி பலரின் துயர் தீர்த்துள்ளது.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பலரும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும், உணவு உள்ளிட்டவை இன்றியும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்தியா முழுவதும் 10 இடங்களில் மக்களுக்கு உதவும் நோக்கில் “சமூக சமையலறையைத்” திறந்துள்ளது. இதன் மூலம் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனரான பவன் கொயங்கா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

“தினசரி கூலித் தொழிலாளிகள் மற்றும் குடி பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கும் 50,000 உணவு பொட்டலங்களை ஒரு வாரத்தில் வழங்கியுள்ளோம். குறிப்பாக ஒரு நாளில் மட்டும் 10,000 உணவு பொட்டலங்களை தயாரித்துள்ளோம். மேலும் இச்சூழலில் உணவு தயாரிப்பதற்கான சமூக சமையலறைகளின்  உள் கட்டமைப்புகளையும் வழங்க உள்ளோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும்,  மும்பையின்  காண்டிவலி பகுதியில் 50 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று  வருவதாகவும் விரைவில் இந்தியா முழுவதும் அவை வழங்கப்படும்”எனவும் தெரிவித்துள்ளார்…