சென்னை: சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா பயிற்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
அரசு பள்ளிகளில், சிற்பி யோகா பயிற்சி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவகளுக்கு 100 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களுக்கு ராஜரத்தினம் மைதானத்தில் இன்று பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது.
தமிழகஅரசு அரசு பள்ளிகளில் காவல்துறையினர் சார்பில், சிற்பி திட்டத்தின்கீழ் மாணாக்கர்களுக்கு யோகா பயிற்சி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் சென்னை காவல்துறையால் கடந்த 5 மாதங்களாக சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிற்பி திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரில் சிறார் குற்றங்களை தடுக்கும் வகையிலேயே சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் மாணவர்களை நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவர போலீசார் முயற்சித்து வருகிறார்கள். இதன்படி மாணவர்கள் என்.எஸ்.எஸ். படை பிரிவிலும் சேர்த்து விடப்படுகிறார்கள். சுற்றுலா தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல் போன்ற பணிகளும் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிற்பி திட்டத்ரதின் கீழ் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை தேர்வு செய்து அவர்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று பிரமாண்ட யோகா பயிற்சி சிற்பி திட்டத்தின்கீழ் நடத்தப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்கள் பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். மைதானத்தில் அவர்கள் யோகா செய்வதற்கு வசதியாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த யோகா பயிற்சியை இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்து யோகா பயிற்சி செய்தனர். தொடர்ந்து, யோகாவில் நன்கு நிபுணத்துவம் பெற்ற யோகா பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.